2/19/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 36 & 37)

எபிசோட் - 36 (17.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வழக்கம்போல முதல் சுட்டி மிஸ்ஸிங்.

மைதிலி வசுமதி வீட்டுக்கு வந்து சிங்காரம் சாம்பு சாஸ்திரிகளை மிரட்ட மறுத்துவிட்டான் எனக் கூறுகிறாள். அவன் இல்லாவிட்டால் என்ன காசு விட்டெறிந்தால் இன்னொருவன் வருகிறான் எனக் கூறிவிட்டு ஜாம்பஜார் ஜக்குவின் மகன் ராயப்பேட்டை ருக்மாங்கதன் என்னும் ருக்குவை அறிமுகப்படுத்துகிறாள். ருக்குவிடம் சாம்பு சாஸ்திரிகள் பூஜை செய்வதை காட்டி அவரைத்தான் மிரட்ட வேண்டும் என வசுமதி அடையாளம் காட்டுகிறாள்.

சாம்பு வீட்டில் அவரவர் தத்தம் வேலையில் ஈடுபடுகின்றனர். தான் பிட்சைக்கு போய்விட்டு அப்படியே வேதபாடசாலைக்கு போய் வகுப்பு எடுக்கப்போவதாகக் கூறுகிறான். அதுதான் அவன் எடுக்கப்போகும் முதல் வகுப்பு என்பதால் அவன் எதில் தொடங்கப்போகிறான் என சாம்பு கேட்கிறார். அவன் ரிக்வேதத்தில் துவங்கப் போவதாகக் கூற, அவன் வெற்றிபெற அவர் ஆசீர்வதிக்கிறார்.

இப்படிப்பட்ட சத்புத்திரனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என சாம்பு கூற அவர் மனைவிய்யோ அவன் குடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை எனவும், அவனை சாம்புதான் கெடுப்பதாக பேசுகின்றனர் என கூறுகிறாள். கூறுபவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், தனக்கு கவலையில்லை என சாம்பு கூறுகிறார். பிறகு அவர் கோவிலுக்கு புறப்படத் தயாராகும்போது அவர் மகள் ஆர்த்தி அன்றைக்கு அவருக்கான ராசிபலனை படிக்கிறாள். அது சுவாரசியமாக இல்லை.

அவரை ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் மனைவி கூற, அவரோ நமச்சிவாய என்றிருந்தால் நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும் என கேட்கிறார்.

ராசிபலனை பற்றி நண்பர் கேட்க பத்திரிகைகளின் வரும் ராசிபலன்கள் ஒட்டுமொத்தமாக கூறப்படுவது அவ்வளவாக நம்பிக்கைக்குரியதில்லை என்றும், ஆனால் சிலர் நம்புகிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனாலும் சில தருணங்களில் நல்லது நடக்கும் என நம்பிக்கை வந்தால் மனதுக்கு தெம்பாகவும் உள்ளது எனக் கூறுகிறார். இது சம்பந்தமாக இல்லஸ்டிரேட்டட் வீக்லியின் ஆசிரியராக குஷ்வந்த் சிங் இருந்தபோது, தானே சிலவாரங்களுக்கு மனதில் தோன்றியதெல்லாம் போட்டு அப்பத்தியை நிரப்பியதாகவும் யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் கூறியது பற்றி முரளி மனோகர் எனக்கு நினைவுபடுத்துகிறான்.

நீலகண்டன் வீட்டுக்கு உமா ஃபோன் போட்டு தன் அன்னை பர்வதத்திடம் பேசுகிறாள். அவள் மாமியார் கவனிப்பதை அறிந்து வீட்டுக்கு வெளியே சென்று செல்லில் தனது அன்னையுடன் பேசுகிறாள். ரமேஷ் தன்னை அசோக்குடன் சம்பந்தப்படுத்தி சந்தேகிப்பதாக அன்னையிடம் கூறுகிறாள். அவளை பொறுமையாக இவ்விஷயத்தை கையாளுமாறு பர்வதம் அறிவுரை கூறுகிறாள். உமாவின் தம்பி ராம்ஜி அத்திம்பேருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என ஆயாசம் அடைகிறான்.

அசோக் மாணவ்ர்களுக்கு வேதபாடம் நடத்துகிறான். திவ்யமான வேதகோஷம், அதை வீடியோவில் பார்ப்பதே சரியாக இருக்கும்.

சாம்புவும் ஆர்த்தியும் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். விளக்கேற்றி பிரார்த்தனை செய்வதன் தாத்பர்யத்தை சோவின் நண்பர் சோவிடம் கேள்வி கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 37 (18.02.10) சுட்டி - 1 & சுட்டி - 2
தன் நண்பருக்கு பதிலாக சோ அவர்கள் ஒரு நீண்ட விளக்கம் அளிக்கிறார். என்னென்ன விதமான தீபங்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களுக்காக ஏற்றப்படும், அதில் எரிபொருளாக காராம்பசு நெய் போன்றவர்றை விட வேண்டும், எந்தெந்த மிருகங்களின் பால்லிருந்து தயாரிக்கப்படும் நெய்யை விடக்கூடாது என்பது பற்றியெல்லாம் கூறுகிறார்.

சாம்புவும் ஆர்த்தியும் கோவிலிலிருந்து திரும்பும் வழியில் மைதிலி ஏற்பாடு செய்த ரௌடி ருக்கு அவரை மிரட்டுகிறான். ஆர்த்தியை முன்னால் அனுப்பிவிட்டு சாம்பு அவனுடன் பேசுகிறார். சாம்பு இந்த ஊரைவிட்டே ஓட வேண்டும் எனவும், மறுத்தால் அவர் பெண்ணின் மானத்தை வாங்கப்போவதாகவும் அவன் மிரட்டி சாம்புவுக்கு ஒருவாரம் டயம் தருகிறான்.

(இந்த இடத்தில் ஹாய்ராம் என்னும் பதிவர் இட்ட ஒரு பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.

hayyram said...
டோண்டூ சார், இந்த எங்கே பிராமணன் குழுவினரில் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள். மனைவியை சந்தேகப்படும் கதாபாத்திரம், ஆள்வைத்து அடிக்கும் கேவலமான புத்தி கொண்ட பெண் பாத்திரம் போன்றவையெல்லாம் கதைக்குத் தேவையில்லை என்று. நிகழ் காலத்தில் வர்ணரீதியான பிராமணனாக வாழ முயலும் ஒருவன் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறான். பணமே உலகம் என்றிருக்கும் இந்த காலத்தில் பவதி பிக்ஷாம்தேஹி என யாசித்து ஒருவனால் வாழ முடிகிறதா? என்று ஒரு சேலஞ்சிங் ரீதியாக கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.

அதை விட்டு வழக்கமான கெட்ட புருஷன், உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற கெட்ட கேரக்டர் கொண்ட வழக்கமான சீரியலாக சோவின் நாடகம் செல்வது அதன் தரத்தைக் குறைக்கிறது. கடுப்படிக்கிறது. இப்போ என்னதான் சொல்ல வர்ரார்ன்னு தினமும் திட்டிக்கொண்டே பார்க்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி தங்கள் கருத்து என்னவோ?


எனது பதில்: எனக்கு மட்டும் இந்த காட்சிகள் பிடித்திருக்கின்றனவா என்ன? ஆனால் ஒன்று சொல்வேன். அசோக் செய்வது தற்காலத்தில் இதுவரை யாருமே செய்து பார்த்திராதது. அதை செய்யும்போது அவனை மீண்டும் வீட்டுக்குள் இழுக்கும் அவன் அன்னையின் முயற்சிகள் தோல்வியையே அடையும். ஆனால் அவற்றை ஹேண்டில் செய்வதில் நல்ல ரசனையோடுதான் வெங்கட் காட்சிகள் எடுப்பார் என நினைக்கிறேன். மற்றப்படி ரமேஷின் சந்தேகம் குழந்தைத்தனமானது. அதை உமாவே பார்த்து கொள்வாள். என்ன, பாகவதரை மிரட்டினார்கள் முதலில் இப்போது சாம்பு சாஸ்திரி. அவ்வளவுதான் வசுமதியின் செயலின் எல்லை என வைத்து கொள்ள வேண்டியதுதான். இது வரைக்கும் சோவின் இந்த சீரியலில் எந்தபிரச்சினையும் சவ்வு மாதிரி எபிசோடுகளை இழுக்க அனுமதிக்கப்படவில்லை. இதுவும் கடந்து போகும் என நினக்கிறேன். மற்றப்படி சோவின் குழுவினர் யாரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

சரி சீரியலுக்கு செல்வோம்.

வீட்டுக்கு திரும்பவரும் சாம்பு மனக்கவலையுடன் இருக்க அவர் மகள் ஆர்த்தி அது பற்றி கேட்கிறாள். அவர் மழுப்பி விடுகிறார்.

மைதிலி வசுமதியிடம் டெலிஃபோன் மூலமாக தனது ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கிறாள். அச்சமயம் சாம்பு அங்கே வந்து நாதனிடம் பேச ஆரம்பிக்கிறார். அவரது முகவாட்டத்தை கவனித்த நாதன் கேள்விகள் கேட்க அவர் ஒன்றுமில்லை எனக்கூறுகிறாள். மைதில் வசுமதியிடம் செல்போனை மைக்கில் போட்டு அங்கு சென்று நாதன் மட்டும் சாம்புவிடமிருந்து பேசுமாறு ஆலோசனை கூறுகிறாள்.

நாதன் அசோக் எப்படி இருக்கிறான் எனக் கேட்க, அவன் வேதபாடசாலையில் கற்பிக்க துவங்குவது பற்றி சாம்பு பெருமையுடன் கூறுகிறார். வர்ண ரீதியான பிராம்மணனாக அவன் மாறுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன என அவர் கூற, வசுமதி கோபம் அடைகிறாள்.

சாம்பு சாஸ்திரிகள் மனவருத்தம் தீர அவரை வட இந்திய தீர்த்த யாத்திரைக்காக செல்லும்படி ஆலோசனை கூறிவிட்டு நாதனிடம் அவருக்கு 25000 ரூபாய்க்கு செக் தருமாறு பணிக்கிறாள். நாதனுக்கு பழைய ஞாபகம் பிளாஷ்பேக்காக வருகிறது. அவரை வீட்டுக்கு காரில் டிராப் செய்வதை குப்புற விழுந்து தடுத்த அவளா அனாயாசமாக 25000 ரூபாய் தரச்சொல்கிறாள், எது எப்படியோ தர்ம சிந்தனை எப்படி வந்தால் என்ன? செக்கை தந்து விடுகிறார்.

செக்குடன் சாம்பு தன் வீட்டுக்கு மனைவி மகளுடன் இது பற்றி பேசுகிறார். தனக்கு கார் லிஃப்ட் தர மூக்கால் அழுத வசுமதியா இவ்வளவு தாராளமாக பணம் தந்தது என எண்ணிக் குழம்புகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

dondu(#11168674346665545885) said...

2010/2/20 Tamilish Support

Hi Dondu,
Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 36 & 37)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th February 2010 04:14:01 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/188929

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஸ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

நன்றி டோண்டு சார்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது