1/26/2010

சூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 3

மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு இன்னும் தெரியவில்லை.

முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே

மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 3)

ரோஜாக்களின் எழுச்சி - 3

நான் வீட்டுக்கு வரும்போது இரவு ரொம்பவே நேரமாகி விட்டது. வீட்டின் பூட்டை சாவி போட்டு திறக்கும்போது பக்கத்து வீட்டு அந்த ஜீனா லோலிட்டா சைரன் செல்பேசியில் தன் தோழியுடன் வழமை போல கத்திப் பேசிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் இகழ்ச்சியுடன் உதட்டை சுழித்து சத்தத்தை அதிகப்படுத்தியது. இன்னொரு பக்கத்து வீடு கம்பெனி அதிகாரி சண்டியனும் தனது செல்பேசியில் யாருக்கோ “காதல்” மொழிகளை கூறிக்கொண்டிருந்தான். பாவம் அவன் கீழ் வேலை செய்பவன் என நினைத்துக் கொண்டேன்.

கண்டுக்காத, என எனக்கு நானே கூறிக் கொண்டேன். ஜெஸ்டஸ் உன்னை இதுவரையில் கைவிட்டதே இல்லை. இப்போதும் ஏதேனும் செய்வாராக இருக்கும் என்றும் சொல்லிக் கொண்டேன். எனது வழமையான வேலைகளை செய்து முடித்தேன். எல்லாம் முடிந்து படுக்கையில் விழ நள்ளிரவாகி விட்டது. ஆனாலும் அந்த செல்பேசிகளின் சேர்ந்திசை முடிந்தபாடில்லை. என்னால் முடிந்த அளவுக்கு அதை அலட்சியப்படுத்திப் பார்த்தேன். களைப்புதான் மிச்சம். ஜெஸ்டஸின் சில்லுகள் தம் வேலையைச் செய்யும் என்பதில் எனக்கு இப்போது சந்தேகம் வந்தது. ஓக்கே, இன்னும் சில நாட்கள் பார்ப்போம். சமாளிக்க முடியவில்லையானால் இந்த ஊரை விட்டே காலி செய்து போக வேண்டியதுதான் என எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

இம்மாதிரி எண்ணங்களில் ஆழ்ந்து தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே ஊசலாடினேன். அண்டை வீட்டார்களை பொருத்தவரை நள்ளிரவு என்பது மாலை. இரவு என்பது அவர்களை பொருத்தவரை விடியற்காலை இரண்டுக்கு முன்னால் அது வருவதில்லை போலும். ஒரு வழியாக அத்தருணத்தில் கூச்சல்கள் ஓய்ந்தன. தூரத்தில் ஒரு நாயின் ஊளை மட்டும் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டேன் (இந்த ஊரில் பவர்கட்டுகள் சகஜம்). கண்களை மூடியவாறு ஜெஸ்டஸ் தந்த நான்கு சில்லுகளையும் கையில் வைத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் கதவைத் திறந்து, வெளியே வந்தேன். வீட்டின் ஒரு வெளிப்புறச் சுவரில் ஒரு சில்லை வைத்து அழுத்தினேன். சுவர் அதை சுலபமாக ஏற்றது. ஜெஸ்டஸ் சொன்ன மாதிரியே சில்லு சபக் என ஒட்டிக் கொண்டது. மற்ற மூன்று வெளிப்புறச் சுவர்களிலும் அவ்வாறே சில்லுகளை பொருத்தினேன். பிறகு ஸ்லோ மோஷனில் உள்ளே வந்து கதவை சார்த்திக் கொண்டேன். படுக்கையில் விழுந்ததுதான் தெரியும். தூக்கமும் கண்களைத் தழுவியது.

விடியற்காலை என்ன நடந்ததென நான் அறியமாட்டேன். ஏனெனில் நான் எழுந்திருக்கும் போதே காலை ஒன்பதைத் தாண்டி விட்டது. வேகவேகமாக காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை எனக்கு.

அன்று இரவு பரவுவதற்குள் வீடு திரும்பினேன். குளித்துவிட்டு ஒரு கப் காப்பியுடன் லுட்லமின் ஒரு நாவலை எடுத்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென வெளியில் கெகெகெக்கே என்ற சிரிப்பு லாஃபன்ஷ்டைனின் குரலில் கேட்டது. ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. அவர்தான் வந்து விட்டாரோ என. எழப்போன என்னை சட்டென நானே நிறுத்திக் கொண்டேன். அப்படியெல்லாம் ஒரு முறைகூட ஜெஸ்டஸ் வீட்டுக்கு வந்தது கிடையாது. உள்ளிருந்தபடியே வெளியே நடப்பதை காதால் கேட்கத் தயாரானேன். லோலிடா சைரனின் குரல் கார்றில் மிதந்து வந்தது. “என்ண்டீ ஹெலன், இவ்ளோ கீக்கிரமா தூங்கப் போயிட்டையா? என்னது சாயந்திரம் நாலு மணிக்கே தூங்க போயிட்டையா, என்ன கேடுகாலம்”?

திடீரென ஜெஸ்டசின் கேலிக்குரல் அவளை இடைமறித்தது. நான் பொருத்திய சில்லுகள் ஒன்றிலிருந்து அக்குரல் வருகிறது என்பதை நான் இப்போதுதான் கவனித்தேன். கேலிக்குரலுடன் கூடவே ஒரு பலத்த சிரிப்பு வேறு. அது ஹெலனுக்கும் கேட்டிருக்க வேண்டும். அவளுக்கு பதிலாக லோலிடாவின் குழ்ப்பத்துடன் கூடிய குரல் கேட்டது. “யாருன்னு தெரியல்லியே. ஏதோ ஜோக்கர் மாதிரி இருக்கு. பார்க்க முடியல்லியே”.
“பாவிகளே, உங்களால் என்னை பார்க்க முடியாது” என ஜெஸ்டசின் குரல் கெக்கலி கொட்டியது. குழப்பத்துடன் ஒரு கவலையும் சேர்ந்து கொண்டது. “இரு, இரு.. எவனோ ஒரு பொறுக்கியாகத்தான் இருக்கணும். கண்டுபிடிக்கிறேன். இங்கதான் எங்கியோ இருக்கணும். பிறகு ஒன்னைக் கூப்பிடறேன், பை பை”.

லோலிடா தன் தந்தையைக் கூப்பிட்டிருக்க வேண்டும். அவரும் வந்து குட்டையைக் குழப்பினார். அவர்கள் குழப்பத்துடன் பேசிக் கொண்டது பின்னணியில் கேட்டது. சற்று நேரம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவள் தந்தை உள்ளே சென்றிருக்க வேண்டும். சைரன் மீண்டும் செல்பேசியில் ஹெலனுடன் பேச ஆரம்பித்தாள். “ஹெலன், நான் எங்கே விட்டேன்”?
“இன்னா கண்ணு மறந்துட்டியா, படிக்கட்டு கிட்டேதான் விட்டே” பதில் சொல்லுவதில் சில்லுக்கு சந்தோஷம். அதுவும் பக்கத்து வீட்டு அதிகாரி சண்டியனின் பக்கத்திலிருந்த சில்லிலிருந்து அவனது குரல் துல்லியமாக வெளிப்பட்டது. அதானே, ஜெஸ்டசா கொக்கா என நினைத்து கொண்டேன். சைரன் சுதாரித்துக் கொள்வதற்குள் கெக்கலிக் குரல்கள், சீட்டியொலி எல்லாம் கூடவே வந்தது. தூரத்திலிருந்து ஆந்தையின் ஒலியும் சேர்ந்து கொண்டது. சைரன் அலறிக் கொண்டே வீடிற்குள் ஓடினாள். அங்கு சிறிது நேரத்துக்கு ரகசிய குரலில் பேச்சு கேட்டது. பிறகு நிசப்தம் பரவியது.

ஒரு விக்கெட் அவுட். ஜெஸ்டஸ் தரப்பிலிருந்து அருமையா இன்ஸ்விங்கர் பந்து. க்ளீன் போல்ட். இப்போ வெளியில் வந்தது கம்பெனி அதிகாரி சண்டியன். அவனது செல்பேசி அவனுடைய காதுடன் ஒட்டிக் கொண்டு கூடவே வந்தது.

“ஏய் ஜானி மொட்டை நாயே, இன்னிக்கு வாடிக்கையாளரோட மீட்டிங் இருக்குங்கறது ஒனக்கு நினைவிருக்கா இல்லையா”, என செல்பேசிக்குள் அவன் கத்தினான்.
“அதிருக்கட்டும்டா டோமரு, இன்னியோட ஒன்னோட ஆட்டம் க்ளோசுங்கறது ஒனக்குத் தெரியுமாடா”? என்று சில்லு நம்பர் 1-லிருந்து லோலிட்டா சைரனின் குரலில் வந்தது பதில். சைரனின் சொந்தக் குரலை விட இது அதிக தத்ரூபமாக இருந்தது. எந்த மிமிக்ரி ஆர்டிஸ்டாலும் எட்ட முடியாத சாதனையாக அது அமைந்தது. அவன் இருந்த ஜோரில் சண்டியன் முதலில் இக்குரல் தனது கீழ்நிலை அதிகாரியிடமிருந்து வந்தது என நினைத்து கொண்டான். “என்னடா சொல்லறே அடீங்கோத்தா”, என அவன் செல்பேசிக்குள் கத்தினான்.
“அட முட்டாக்கூ யார் பேசறாங்கறதை கண்டுட்டு பேசுடா முதல்லே”, சைரனின் குரலில் இழுத்து இழுத்து பேசியது சில்லு. சண்டியனுக்கு ஒரே ஷாக். அவன் செல்பேசி கீழெ விழுந்தது (அது என் காதில் கேட்டது). அவன் குனிந்து அதை எடுத்தான் (அப்படித்தான் அவன் அதை செய்திருக்க வேண்டும்). இதெல்லாம் நடக்கும்போது சைரனும் அவள் அப்பாவும் வெளியே வந்து அவனை முறைத்து பார்த்திருக்க வேண்டும் (நீங்க நினைப்பது சரியே). சண்டியன் அவன் தரப்புக்கு அவர்களை விழித்துப் பார்த்தான். (மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஆந்தையே அதற்கு சாட்சி). முதலில் சுதாரித்து கொண்டது சண்டியன். அவர்களைப் பார்த்து அவன் கத்தினான்,
“என்னன்னு நெனச்சிட்டிருக்கீங்க? எதாவது நாடகத்துக்கு ஒத்திகை பாத்துட்டிருக்கீங்களா”?
“இந்தக் கேள்வியை நாங்கத்தான் ஒங்க கிட்டே கேட்கணும்”, இது சைரனின் தந்தை.
“அப்பூ நீங்க யாருமே இல்லை, இது நான்தேன்” என்ற பக்கத்து வீட்டு மாணவனின் கழுதைக் குரலில் அவன் பக்கத்து சில்லுவிலிருந்து கெக்கலி வந்தது. சொல்லிவைத்தாற்போல அவனும் தனது செல்பேசியுடன் அங்கு ஆஜர் ஆனான். அவனை நோக்கி மூன்று ஜோடி கண்கள் தீப்பார்வையை பொழிந்தன. ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் அவன் சுதாரித்துக் கொண்டான். அவன் காலேஜில் அவன் பார்க்காத சண்டியர்களா? அவர்கள் பார்வைக்கெதிராக தனது பார்வையை செலுத்தினான்.

“என்னப்பா சொன்னே” ஒரே சமயத்தில் மூவரிடமிருந்து கேள்விக்கணை பாய்ந்தது. “எதை எப்போ சொன்னேங்கறீங்க”? என்று ஒரு கேள்வியை அவன் எழுப்பினான். அவனுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டிருப்பவர் ஏதோ கேட்டிருக்க வேண்டும்,
“என்னன்னு தெரியல்லியேப்பா, மூணு பைத்தியங்கள் என்னை ஏதோ கேக்கறாங்க, நீ கொஞ்சம் வெயிட் பண்ணு, என்னன்னு விசாரிச்சுட்டு வரேன்”.
பிறகு மூவரையும் நோக்கி கேட்டான்“யாரு யார்கிட்டே என்ன சொன்னதா சொல்லறீங்க”?

எனது ஆவல் எல்லை மீறியதால், மெதுவாக கதவை சிறிதளவே திறந்து பார்த்தேன். மூன்று பார்ட்டிகளும் ஒருவரை நோக்கி ஒருவர் கோபப்பார்வைகளை வீசிய வண்ணம் இருந்தனர். ஏதோ குண்டு வெடிக்கப்போவது போல சூழ்நிலை நிலவியது. நான் மெதுவாக ரிவர்ஸ் கவுண்டிங் ஆரம்பித்தேன், “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு...”. அவரவர் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் வெஸ்டர்ன் படத்தில் வருவது போல சுட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். எனது எண்ணிக்கை ஒன்றுக்கு வரவும் கடைசி சில்லுவிலிருந்து ஜெஸ்டசின் குரல் கிரீச்சிடவும் சரியாக இருந்தது.

“சுடுங்க எஜமான் சுடுங்க. இத்தனை நாளா வாயினாலே சுட்டீங்க, இப்ப, போங்க போய் துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுங்க எஜமான் சுடுங்க”, கூடவே அவரது கெக்கெக்கே என்னும் சிரிப்பு. ஜன்னல் பலகைகள் அதிர்ந்தன. இப்போது நால்வரும் நாலா பக்கங்களிலும் கழுத்தைத் திருப்பி யார் பேசுவது என்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

பிறகு அவரவர் தத்தம் கூட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். வெளியில் வழக்கமான செல்பேசி கூச்சல்கள் மிஸ்ஸிங். நானும் பேசாமல் வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்றேன்.

(தொடரும்)

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது